முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டியினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் இன்று (03) உத்தரவிட்டார்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் திகதி அப்போதைய இராஜாங்க அமைச்சரான எஸ்.வியாழேந்தின் வீட்டுக்கு முன்னால் அவரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடத்தவில்லை என தொடர்ந்து ஆட்சபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் விசாரணைகளைக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் வியாழேந்திரனின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுஷன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலைக் குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் நேற்று (2) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சி.ஐ.டியினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியானதுடன் 3 வருடத்துக்குப் பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



