தை பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு வரும் 14 ஆம் திகதி 4 விசேட ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜயசுந்தர தெரிவித்தார்.
இரவு 07:30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை ஒரு ரயில் இயக்கப்படும்.
மற்றைய ரயில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை மாலை 5.40 மணிக்கு பயணிக்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு காலை 5:30 மணிக்கு விசேட இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுவதுடன், பிற்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தைப்பொங்கல் பண்டிகைக்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் தமிழ் மக்களுக்கு போதிய பஸ்கள் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



