ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடுத்துள்ளது. இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலைடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது.
வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது இஸ்ரேலின் மொஸாட் (MOSSAD) அமைப்பும் ஈரானில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவ வானொலி தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவ அதிகாரி ஹுஸைன் சலாமி உயிரிழந்திருப்பதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரியளவில் நடத்தப்பட்ட தாக்குதல் என சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன. அடுத்து என்ன செய்யலாம் என ஈரான் தரப்பில் முடிவெடுக்க கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு என்ஐஏசி அமைப்புக் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இது அமெரிக்காவை உள்ளடக்கிய பெரியளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



