மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்தவரும் தெஹிவளை பொலிஸில் விசேட கடமைக்கு இணைக்கப்பட்டவருமான
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (20) அதிகாலை தெஹிவளை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
பின்னர், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, குடியிருப்பாளர்கள் விழித்தெழுந்து, சந்தேக நபரைப் பிடித்து, அவரை அடித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தெஹிவளை பொலிஸின் நடமாடும் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததாகவும் சந்தேக நபர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதை அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்பாளர்களின் தாக்குதலில் காயமடைந்த கான்ஸ்டபிள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..



