(பாறுக் ஷிஹான்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாறுனின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஒன்றுகூடல் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலின் போது பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவரான நளீர், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளிலும் உதவியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணினி விஞ்ஞான துறையில் முதலாவது பேராசிரியர் என்ற வரலாற்று இடத்தை தனதாக்கிக் கொண்ட கலாநிதி நளீர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1996 முதல் 1998 வரை உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்து கொண்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார்.
இதேவேளை கணினி விஞ்ஞான துறைக்கு 2015-2017 வரை இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது கனிணி விஞ்ஞான துறையின் திணைக்களத் தலைவராக பணியாற்றும் கலாநிதி நளீர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த பிரிவுகளிலும் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனையை இவர் பிறப்பிடமாகக் கொண்டவராவார்



