அபாயகரமான எல்லைக்குள் பிரவேசிக்கும் புதிய ஊடகங்கள்! - உமர்லெப்பை யாக்கூப்

Articles
Editor 2025-09-26 13:18:00

செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் ஆதிக்கம் வலுவாகக் குறைந்து கொண்டு செல்லும் நிலையில் சமூக ஊடகங்கள் எனும்  புதிய ஊடகத்தின் எழுச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு இன்று பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது.

நேபாளத்தில் தலைகீழாக புரட்டி எடுத்து வீசப்பட்ட ஆட்சி அதிகாரங்கள் மற்றும் அந்த நாட்டு  பாராளுமன்றத்திற்கே மூட்டப்பட்ட தீ, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட போது அதற்குள் சிக்குண்டு உயிர்நீத்த அவரது துணைவியாரின் இழப்பு, அந்த நாட்டு நிதியமைச்சர் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அகோரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அரச உடமைகள்  பொதுச் சொத்துக்கள் தீயினால் கருகி சாம்பலாகிப்போன காட்சிகள் அனைத்தும் ஒரே ஒரு செய்தியை உலகுக்கு கூறியுள்ளன. அதாவது நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசு மேற்கொண்ட அடக்குமுறை மற்றும் அமுல் செய்யவிருந்த புதிய ஊடகங்கள் தொடர்பில் அழுத்தம் தரும் வகையிலான புதிய சட்டங்கள் மக்களின் பெரும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டன. குறிப்பாக அந்த நாட்டு இளைஞர் யுவதிகள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது. 

அதன்  விளைவே நேபாளத்தில் ஏற்பட்ட  அரசியல் நெருக்கடிக்கு  பிரதான காரணி என்று கூறப்படுகிறது. ஆனாலும் அங்கு நிலவிய லஞ்சம் மற்றும் ஊழல்கள் நிறைந்த ஆட்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட கடும் அதிருப்தி மற்றும்  கண்டனங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

செய்தி மற்றும் ஊடக கற்கை நெறிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நாம் ஒரு விடயத்தை சொல்வதுண்டு... அதாவது உங்கள் கைகளில் “ஸ்மார்ட் போன்” இருந்தால் நீங்களும் செய்தியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள்தான் என்று செய்தி சேகரிப்பு (News Gethering) விடயத்தில் குறிப்பிடுவதுண்டு. இந்த கூற்றை வைத்து இன்று கைகளில் போன் வைத்திருப்போரில் அனேகமானோர் தம்மையும்  ஊடகவியலாளர்களாகவே பிரகடனம் செய்த நிலையில் நினைத்த மாத்திரத்தில் எழுந்தமானமாக எதையும் எழுதலாம் எத்தகைய காட்சியையும் சமூகமயப்படுத்தலாம் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்தான காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இத்தகையவர்களின் பேச்சில் வாய்மை கிடையாது. நடத்தையில் நாகரீகம் இல்லை. பழக்க வழக்கங்களில் பண்பாடு இல்லை. செய்யும் தொழிலில் நேர்மை இல்லை. நீதி, நியாயம் என்றால் என்னவென்று தெரியாது. கருத்துச் சுதந்திரம் என்பதன்  வரையறை தெரியாது.  நாட்டின் அரசியலமைப்பு பற்றி போதிய அறிவு இல்லை.  நீதிமன்றங்களில் இருக்கும்  விவகாரங்கள் தொடர்பில் பகிரங்கமாக கருத்துச் சொல்லக்கூடாது என்ற வரையறைகள் பற்றி அறியாத நிலையில்  இத்தகைய ஒரு சிறிய கூட்டம்  மூழ்கிப்போய் கிடப்பதே பெரும் துரதிர்ஷ்டம் நிறைந்த ஒரு சூழ்நிலை ஆகும். இவர்களில் சிலர் தம்மையும் பெரும் சட்ட மேதைகளாக நினைத்துக் கொண்டு எழுதுவது போல இவர்களின் பதிவுகள் அமைகின்றன.  ஒரு சிலர்   மணிக்கு ஒரு தடவை  ஏதாவது ஒன்றை எழுதியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அன்றைய நாள் நிறைவடையாது  என்பது போல கண்ட நிண்டதை எல்லாம் கொட்டித் தீர்க்கும் அவலத்தையும் இன்றைய சமூக வலைத்தளங்களில் அதிகம் காணும் துர்ப்பாக்கிய நிலையில் இந்த புதிய ஊடகங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

சிலர் தனி ஒருவரின் நற்பெயரைக்  கெடுப்பதிலும் சிதைப்பதிலும் பேரின்பம் காண்கின்றார்கள்.  ஒரு மனிதன் தனது திறமை, அனுபவம் ,ஆளுமை, செல்வாக்கு போன்றவற்றை பூரணமாக அடைந்து கொள்ள எத்தகைய தியாகங்களை அவனது வாழ்நாளில் சந்தித்திருப்பான். எவ்வளவு  வலிகளை சுமந்திருப்பான். எத்தனை சவால்களைச்  சந்தித்து எத்தனை தடைகளை  அவன் தாண்டி இருப்பான். அவனது துறை அரசியலாகவோ,  ஊடகமாகவோ, கல்வி, நீதி, வைத்திய மற்றும் பொருளாதாரத் துறையாகவோ அல்லது சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும்  எத்தகைய  துறை சார்ந்தவராக இருந்த போதிலும்  தமது துறைகளில் அவர்கள் அடைந்த உயர்வுகளையும் சாதனைகளையும் பங்களிப்புகளையும் ஓரிரு வரிகளிலேயே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில் சிலரின் எழுத்துக்கள் அமைவது வியப்பையும் கவலைகளையும் பெரும் நஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியவையாக அமைகின்றன.  அத்தகைய பெறுமதி மிக்கவர்களின் நற்பெயரை  தனது சுய  பிரபல்யம் என்ற  மாயைக்காக அல்லது மஞ்சள் கவர்களுக்காக  ஒரு நொடிப்பொழுதில் தகர்த்து விடும்  அபாயகரமான ஒரு போக்கில்  இன்றைய நவீன ஊடகங்கள்  பிரயோகிக்கப்படுவது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும்.  இதில் கொடுமை என்னவென்றால் மூத்த ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்று நாம் மரியாதை கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் கண்ணியமாக நினைத்துக் கொண்டிருப்பவர்களும்  இந்த பட்டியலில் அடங்குவதுதான். 

ஊடகத்தொழில் என்பது  தனி மரியாதைக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த  ஒரு துறையாகும்.  எப்போதும் மக்களின் பார்வையில் விருப்பத்திற்கும்  அபிமானத்திற்கும் உரிய  கவர்ச்சிகரமான ஒன்றாக இது திகழ்கின்றது.  கடினமாக உழைப்பதும் கவனமாக தொழிற்படுவதும் உண்மையின் பக்கம் தம்மை நிறுத்தி நேர்மையின்பால் மக்கள் மன்றத்தில்  மக்களின் குரலாக செயற்படும் ஒரு துணிச்சல் மிக்க துறை ஆகும்.  அநேகமான நாடுகளில்  நீண்ட அனுபவம் கொண்ட அறிவுபூர்வமான ஊடகவியலாளர்கள்   நட்சத்திர அந்தஸ்துக்கு ஒப்பானவர்களாக மதிக்கப்படுகின்றார்கள். இத்தகைய நீண்ட வரலாறு கொண்ட ஊடகத்துறை இன்று “அமானுஷ்ய சக்தி” கொண்டவர்களாலும் ஜாதகக் குறிப்புச் சொல்பவர்களாலும்  சிறுபிள்ளைத்தனமாக செய்தி எழுதும்  நிருபர்களாலும் சுயபுராணம் பாடும் மூத்தோர்களாலும் நிரம்பிச் சீரழியும் ஒரு இக்கட்டான நிலைக்குள்  வந்து நிற்கிறது.

தமது மதங்கள் மீது தாம் கொண்ட பக்தியை விடவும்  தான் சார்ந்த கட்சிகள் அல்லது இயக்கங்கள்,  அமைப்புகள் மற்றும் அதன் தலைமைகள் மீது பக்தி  கொண்டு  உண்மைக்கு புறம்பான விடயங்கள்  வெறித்தனமாக எழுதப்படுவதையும்  அவதானிக்க முடிகிறது.  இன்னும் சிலருடைய எழுதும் பாணியை பார்க்கும்போது நகைச்சுவையாகவும் இருக்கிறது. அவர்கள் எழுதும்போது  எழுத்துக்களை  கையாளும் விதம்  வினோதம் நிறைந்த மொழி போலவும்  தமிழ் மொழியை மாற்றிக் கொண்டிருக்கின்றது. இத்தகையவர்களில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரும் இலக்கியப் பரப்பில் கலை படைப்பவர்களும் அடங்குவது கவலைக்குரியது. இவர்களது எழுத்தும் எண்ணமும் நவீன ஊடகங்களில் இன்னும் ஒரு முதிர்ச்சியற்ற  போக்காகும். சாதாரண  சமகால உரையாடல்கள் எல்லாம்  கவிதைகள் என்ற பெயரில் அன்றாடம் அரங்கேறுவது இன்னுமொரு பரிதாபம் ஆகும்.  ன ண ல ள ழ ர ற  .... போன்ற விஷயங்கள் பற்றியும் அவை பிழையாக பயன்படுத்தப்படும்போது எவ்வளவு பாரதூரமான அர்த்தத்தைக் கொடுக்கும் என்பதையும்  இத்தகையவர்கள் கண்டு கொள்வதும்  இல்லை. அதேபோல அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.  போதாக்குறைக்கு மேடைகளிலும் ஊடகங்களிலும் கூட கூச்சம் இன்றி  இவர்கள் உச்சரிப்பது இன்னொரு கொடுமை.

இவை அனைத்தையும் தாண்டி இன்று AI Artificial intelligence  செயற்கை நுண்ணறிவு  எனும் தொழில்நுட்ப யுக்தி மேலோங்கி நிற்பதும்  இவ்வாறான சக்திகளின் கரங்களில்  AI அகப்பட்டுக் கொண்டுள்ளது என்ற ஆபத்து நிறைந்த சமிக்ஞையைக்   குறிக்கின்றது.  அமெரிக்க வல்லாதிக்கத்தின் கண்டுபிடிப்பான AI தொழில்நுட்ப அறிவுக்கு  நிகராக சீன கம்யூனிச வல்லரசு “Deepseek” என்ற பெயரில் ஏட்டிக்கு போட்டியாக ஒரு தொழில்நுட்பத்தை தயாரித்துள்ள நிலையில்   இந்த விவகாரம் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டிய  ஒன்றாகும். இத்தகைய தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது  என்பது அணுகுண்டுகளின் தாக்கத்தை விடவும் அகோரம் வாய்ந்தவை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவைகளின் உண்மைத் தன்மையை “Chatgpt” போன்ற அறிவுத்திறன்  வாய்ந்த தொழில்நுட்பங்கள் மூலம்  பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அறிந்து கொள்ளலாம். அல்லது அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது ஒரு ஆறுதலான செய்தியாகும்.

மேலே  குறிப்பிட்டுள்ள விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூக ஊடக வலைத்தளங்களில் அன்றாடம் பெருகிவரும் ஆபத்தான ஒரு நிலைவரமாகும்.

ஆரோக்கியமான ஊடகத்துறை உருவாக்கம் பெறுவதற்கு இந்தத் துறையை தொழில் ரீதியாக விருப்பத்துடனும் பக்தியுடனும் கொண்டு செல்லும் இளைய சமுதாயமொன்று கட்டி எழுப்பப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி
உமர்லெப்பை யாக்கூப்
ஒலி/ஒளிபரப்பாளர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்.
2025 செப்டம்பர் 25.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail