(ஏ.ஜீ.எம்.தௌபீக்)
கலைக்கு உயிரூட்டுவது கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும். அழகுணர்ச்சி என்பது மனிதனின் உளவிருத்திக்கு பங்காற்றுகிறது. இயற்கையோடு பிறந்த மனிதன், இறைவனின் அற்புதங்களுக்கு மெருகூட்டும் வகையில்தான், கலையின் பங்களிப்புக்கள் உள்ளன.இதனால்தான், கலைஞர்கள் காலத்தின் படைப்புகளாக பார்க்கப்படுகின்றனர்.
கவிதை,ஓவியம்,சித்திரம்,நடனம்,நாட்டியம்,இசை,பாட்டு மற்றும் பேச்சு என்பவற்றில் தேர்ச்சியுள்ளோர் கலைஞர்களே! அரசாங்க மட்டத்தில் இத்துறையை ஊக்குவிக்குமளவுக்கு கலையின் முக்கியத்தும் உள்ளது.அந்த வகையில், நாட்டில் நாற்பதாவது கலாபூஷண விருது விழா அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இருநூறு கலைஞர்கள் இதில், கௌரவிக்கப்பட்ட னர்.இதில்,சிரேஷ்ட ஊடகவியலாளர் சட்டத்தரணி ஏ.எம்.தாஜும் ஒருவர். பாடசாலைக் காலத்திலிருந்தே தமக்குள்ளிருந்த கலையின் ஆற்றல்களை வௌிப்படுத்த தொடங்கிவிட்டார்.
நூல்களுக்கு அட்டைப் படம் கீறுதல், பாடசாலைச் சுவர்களில் சித்திரம் வரைதல்,ஓவியம் தீட்டுதல்,கேலிச் சித்திரம் வரைதல்,கவிதை மற்றும் அறிவிப்புத் துறைகளில் சுமார் நான்கு தசாப்த கால அனுபவம் இவருக்குண்டு. மொழியின் பயன்பாடுகளை புறந்தள்ளும் ஆற்றல் இந்த சித்திரங்களுக்குள்ளன.கருத்துக்களை மொழிகளுக்குள் வரையறுக்காது,அவரவர் சிந்தனைச் சுதந்திரத்துக்கு விடும் மிகப்பெரிய ஆற்றல்களும் இந்த சித்திரங்களுக்கு (கலைக்கு) உள்ளன.நண்பர்களுடன் இவர் பழகும் பாங்கிலும், கலைநயம் களைகட்டும். தனது பிராந்தியங்களுக்கு வரும் அரசியல் தலைவர்களை ஓவியமாக வடிப்பது அல்லது சித்திரமாக வரைவதில் இவருக்கு தனிச்சிறப்பு உள்ளது.

அரசியல் துறையிலும் இவரது ஈடுபாடுகள் கலையுடன் கலக்கின்றன. இலங்கை ரூபவாஹினியில் "சதுரங்கம்"நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளிடமிருந்து கருத்துக்களை பிடுங்கியெடுக்கும் இவரது பாங்கும் பக்குவமும் ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்யும்.விவாதங்கள் வாய்த்தர்க்கமாக மாற நேரிடும்போது,அதை ஆற்றுப்படுத்தும் ஆயுதமாகவும் இவரது கலைத்துவம் காணப்படுகிறது.
இதேபோன்றுதான், இலங்கை ஒலுபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவரது ஒலிபரப்புக்கள் இருந்தன.
அந்தவகையில் கலைஞர்களை கௌரவிக்க வழங்கப்படும் கலாபூஷண விருது ஏ.எம்.தாஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.இயற்கை காட்சிகளை படம்பிடித்து முகநூல்களில் பதிவிடுவதால்,எல்லை கடந்த கற்பனைக்கு கலையின் அழகை, தத்துவத்தை அழைத்துச் செல்லும் ஏ.எம்.தாஜின் ஆற்றலும் ஒரு அழகுணரச்சியேதான்."உலகமோ இறைவனுள் அடக்கம், இறைவனோ ஞானத்துள் அடக்கம்" என்பார்கள். இவற்றின் பொருட்பொதிவை பூடகமாகச் சொல்லும் திறைமை கலைக்குண்டு.



