மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு எதிர்வரும் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற நூலின் அறிமுக நிகழ்வும் நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும், லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமை தாங்குவதுடன், வரவேற்புரை; மூத்த ஊடகவியலாளர் அனந்த பாலகிட்னர் நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து 'பாரதி ஒரு மனிதநேய ஊடகன்' என்ற மலரின் பிரதியை ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், தொடக்கவுரையை சிரேஷ்ட விரிவுரையாளரும் மூத்த ஊடகவியலாளருமான திருமதி எம்.எஸ். தேவகௌரி, சிறப்புரைகளை தினகரன் பிரதம ஆசிரியர் எஸ்.செந்தில்வேலவர், முரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேபர்ஸ் பிரைவட் லிமிட்டட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளதுடன், தொகுப்புரையினை மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன் நிகழ்த்தவுள்ளார்.



