கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இலங்கையுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை மீண்டும் திறக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்காக ஆஜரான சட்டமா அதிபர் ஆர். வெங்கடரமணி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர வழிகள் மூலம் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், தனது நிலைப்பாட்டை ஏற்கவோ அல்லது அதற்கேற்ப செயற்படவோ இலங்கையைக் கட்டாயப்படுத்தும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைக் கட்டுப்படுத்தும் 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முன்வைக்கப்பட்டன. இந்திய மீனவர்களால் சர்வதேச கடல் எல்லைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுவதையும் இந்திய அரசு கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியப் பகுதியில் மீன்வளம் குறைந்து வருவதால், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.



