ஹோமகம பொலிஸ் காவலில் உயிரிழந்த சந்தேக நபர், தாக்குதல் தொடர்பான காயங்களால் உயிரிழந்ததாக பொலிஸ் நம்புகிறது என்று மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரைக் கையாண்டபோது அதிகாரிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
காவலில் நிகழ்ந்த மரணம் தொடர்பாக ஹோமகம பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து கூறிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சந்தேக நபருக்கு மூன்று விலா எலும்புகள் முறிந்திருப்பது மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாகவும், அதேவேளையில் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த தகவல்கள் தலையில் காயங்கள் மற்றும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார்.
இந்த மரணம் ஒரு தாக்குதலுடன் தொடர்புடையதாக பொலிஸ் நம்புவதாகவும், ஆனால் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் முடிந்த பின்னரே சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகளை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர் பொலிஸ் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, ஹோமகம பொலிஸ் குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் துறைக்குத் தகவல் கிடைத்திருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு இன்னும் திட்டவட்டமாக நிரூபிக்கப்படவில்லை என்றும், அது விசாரணையில் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு சந்தேக நபர் தாக்கப்பட்டார்!
பொலிஸாரினால்ல அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 24 அன்று, சந்தேக நபர் சம்பந்தப்பட்ட மற்றொரு தாக்குதல் சம்பவத்தையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கூற்றுப்படி, இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஆனால் ஆரம்பத்தில் அவர் மிதிவண்டியிலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாகக் கூறியிருந்தார்.
“சந்தேக நபர் அக்டோபர் 25 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 24 அன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,” என்று கூறினார்.
சந்தேக நபர் மருத்துவ அனுமதி இல்லாமல் வெளியேறுவதற்கு முன்பு பல மணி நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்ததாக அவர் விளக்கினார்.
“கைது செய்யப்பட்டபோது, அவர் மிதிவண்டியிலிருந்து கீழே வீழ்ந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். இருப்பினும், இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறின்போது அவர் உண்மையில் தாக்கப்பட்டார் என்பது பிற்கால விசாரணையில் தெரியவந்தது,” என்று சிரேஷ்ட டிஐஜி கூறினார்.
அக்டோபர் 24ஆம் திகதி நடந்த தாக்குதல் மற்றும் ஹோமகம பொலிஸில் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகள் குறித்து தனித்தனி விசாரணைகள் நடைபெற்று வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.
காவல்துறை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை
சந்தேக நபரின் தடுப்புக்காவல் தொடர்பான சூழ்நிலைகளை விளக்கிய அவர், கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் ஆரம்பத்தில் கடுமையான உடல்நலக் கோளாறுகள் குறித்துத் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
இருப்பினும், பின்னர் பொலிஸ் நிலையச் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அவர் உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகளைக் காட்டியதால், அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சந்தேக நபரை காவலில் எடுத்தபோது, அதிகாரிகள் பல கட்டாய நடைமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறியதை சிரேஷ்ட டிஐஜி ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்படும் நேரத்தில் சந்தேக நபரின் உடல்நிலையை ஆவணப்படுத்தவும், முறையான பதிவேடுகளைப் பராமரிக்கவும், விசாரணையின்போது நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றவும், சந்தேக நபரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் பொலிஸ் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதனால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நாங்கள் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்தோம்,” என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி, பின்னர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விசாரணையின் முடிவல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேக நபர் தாக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்வதற்கும், மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்கும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
சந்தேக நபரின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்காக, அக்டோபர் 24 அன்று பதிவான தாக்குதல் சம்பவம் மற்றும் அக்டோபர் 25 அன்று ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் ஆகிய இரண்டையும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



