ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள், முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே மற்றும் மேலும் மூவரின் மறைமுக ஒப்புதலுடன் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையின் விளைவாகவே நடத்தப்பட்டன என்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் குற்றப் புலனாய்வுத்துறை (CID) வெளிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரசாத் ரணசிங்க, நிஷாந்த சொய்சா மற்றும் ஆஸாத் மௌலானா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உட்பட பல இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், சுரேஷ் சலேவின் உடல்நலக்குறைவு காரணமாக விசாரணைகள் தாமதமடைந்ததாகவும் அக்டோபர் 06 ஆம் திகதியன்று அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட பின்னர் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.



