ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இரண்டாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் போது, பணிப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டது.
கிரிக்கெட்டின் உலகளாவிய விரிவாக்கம், பார்வையாளர்களின் ஈர்ப்பை அதிகரித்தல் மற்றும் வணிக மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஜெய் ஷா தனது தலைமைத்துவத்தைத் தொடர்வது முக்கியம் என்று ஐசிசி பணிப்பாளர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவதால், இந்த விளையாட்டு புதிய பார்வையாளர்களை ஈர்க்கவும், ஒரு புதிய தலைமுறை வீரர்களை உருவாக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
மேலும், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி, இணை உறுப்பு நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல், சர்வதேச கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் இந்த விளையாட்டின் நீண்டகால இருப்புக்காக நிலையான வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்று ஐசிசி மணிப்பாளர் குழு வலியுறுத்தியுள்ளது.
தனது மறுநியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தன் மீது நம்பிக்கை வைத்த பணிப்பாளர்ர் சபைக்கு நன்றி தெரிவித்தார்.
கிரிக்கெட் தற்போது அதன் வரலாற்றிலேயே மிக முக்கியமான மற்றும் விறுவிறுப்பான காலகட்டங்களில் ஒன்றில் நுழைந்து கொண்டிருப்பதாகவும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது, உலகெங்கிலும் உள்ள புதிய பார்வையாளர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
மேலும், கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுவானதாகவும், நீடித்ததாகவும் மாற்றுவதற்கு உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.



